Skip to content
TCW Songs

Artist

Bro. Henry Alfred Krishnapillai

Bro. ஹென்றி ஆல்ஃப்ரெட் கிருஷ்ணபிள்ளை

6 songs

பெயர்: எ.ஆ. கிருஷ்ணபிள்ளை பெற்றோர்: சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை பிறந்தநாள்: ஏப்ரல் 23, 1827 இறப்பு தேதி: பெப்ரவரி 3, 1900 என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை: கிறித்துவக் கம்பர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. இவர் எழுதியனவாகச் சொல்லப்பெரும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்பன இப்பொழுது கிடைத்தில. இரட்சணிய மனோகரத்தின் பெரும்பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றது ஆகும். இவரைக் கிறித்துவக் கம்பர் எனப் புகழ்வர். வாழ்க்கை வரலாறு: கிருஷ்ண பிள்ளை தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தவர், வைணவ சமயத்தவர் ஆவார். இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. கிருஷ்ணப் பிள்ளை இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி குலவித்தையாக நன்கு கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகப் பாடங் கேட்டு அறிந்திருந்தார். அக்காலகட்டத்தில் நெல்லை சீமையில் பல கிருத்தவ சங்கங்கள் சிறந்தமுறையில் சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. அவ்வாறு வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் தொண்டு புரிந்துவந்தார். கிருத்தவ அச்சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. சாயர்புரம் என்ற சிற்றூரில் போப்பையர் ஒரு கல்லூரி அமைத்து நடத்திவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல் ஐயரிடம் ஒப்படைக்கபட்டது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து. தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்று தகுதிவாய்ந்தவராக இருந்த கிருஷ்ண பிள்ளையைக் கால்டுவெல் ஐயர் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார். சாயர்புரத்தில் வேலையேற்று ஆசிரியர் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவ சமயப் பற்று மெல்லத் தளர்வுற்றது. ஏற்கனவே இவரது உறவினர் சிலர், கிருத்தவ சமயத்தை ஏற்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதன் செம்மையை அடிக்கடி இவரிடம் எடுத்துரைப்பாராயினர். அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருத்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். இதனால் கிருத்துவ சமயத்தின் மீது பற்றுகொண்டவராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் இவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருத்துவ சமயத்தை ஏற்றுக்கொண்டார். கிருத்தவ சமய சார்பான சிறந்த நூல்களை இலக்கியங்களைப் படைத்த இவர், தம் எழுபத்து மூன்றாம் வயதில் இறந்தார். இவரது படைப்புகள்: போற்றித் திருவருகல் இரட்சணிய யாத்திரிகம் இரட்சணிய மனோகரம் இரட்சணிய குறள் இரட்சணிய பாலா மேற்கோள்கள்: ரா. பி. சேதுப் பிள்ளை (1993). "கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்". நூல். எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பப்ளிஷர்ஸ். pp. 59–64. 11 சூன் 2020 அன்று பார்க்கப்பட்டது. வெளி இணைப்புகள்: எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி தென்னிந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார். கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார். 1852ம் ஆண்டு சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியமர்ந்த கிறிஷ்ணபிள்ளை அவர்கள் அங்கு மிஷனரியாகப் பணியாற்றிய "ஹக்ஸ்டபிள்" குடும்பத்தினரின் நற்குணச் செயல்களினால் பெரிதும் கவரப்பட்டார். ஏற்கனவே தமிழ்ப் புலமைபெற்றிருந்த அவர், வடமொழியையும் கற்றுத்தேர்ந்தார். அச்சமயம் கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் தனுக்கோடி ராஜீ மற்றும் முத்தையா ஆகியவர்கள் கிறிஸ்தவத்தை தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயாணம், புதிய ஏற்பாடு, இளமை பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் ஆதியாகமம் முதல் யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்துகொண்டார். அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதிகொண்டார். வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார். 1858 ஏப்ரல் 18ம் திகதி மயிலாப்பூரிலுள்ள தூய தோமஸ் திருச்சபையில் ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணபிள்ளையென்ற பெயருடன் திருமுழுக்கு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். 1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார். திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய „இரட்சணிய தேவாரம் என்பன கிருஸ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது. "கிறிஸ்துவே எனக்கெல்லாம்" எனும் பதிகத்தில் எனக்கார் துணை யாருறவே என இறைவனை நோக்கிக் கேட்கும் அவரது முதற்பாடலான கீர்த்தனையில் பக்தி பரவசத்தை உணர முடிகின்றது. தமிழ் பண்டிதராக சாயர்புர கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் குரு இவரை „மனிதரை பிடிக்கிறவர் என அழைத்தார். இவர் ஏராளமான கிறிஸ்தவ பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல் தலைசிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூலை எழுதினார். கிருஸ்ணபிள்ளை அவர்கள் "கிறிஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சந்தாய் நிஷ்களமாய் பாடல் இன்றும் தேவாலயங்களில் விரும்பி பாடப்படும் கீர்த்தனையாகும். 1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73ம் வயதில் மரித்த இவர் சமாதானப்புரத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இறைவனையே தன் துணையாகக் கொண்டு வாழ ஒரு மனிதன் முன்வரவேண்டும் என்பதற்கு கிருஷ்ணபிள்ளையின் இவ்வுலக வாழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.